இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்.

இந்திய அரசியலின் ஈர்ப்புசக்தி. 60களின் சினிமா உலகத்துச் சிம்மசொப்பனம். தீர்க்கமான திட்டக்காரர். வடிவும் வனப்புமுள்ள வசீகரன். தங்கபஸ்பத்து தலைவன். 21ம் நூற்றாண்டின் தந்தையர் தலைமுறை தலைமேல் வைத்தாடுகிற தனிப்பெரும் தலைமை.

அதே சமயம் முற்றிலும் புரிந்து கொள்ளமுடியாதவர். இந்த நேரத்தில் இப்படித்தான் இருப்பார் என்று அளவிடமுடியாதபடிக்கு எப்போதும் தனிமுடிவுகளை தடாலடியாக எடுக்கக்கூடியவர். நடிகர், சமூக நீதிப் போராளி, இயக்குநர், தயாரிப்பாளர் , திராவிட இயக்கங்களின் தேர்தல் காலங்களில் அண்ணாவின் அன்பிற்கு அனுக்கமான பிரச்சார பீரங்கி, அரசியல்வாதி, முதலமைச்சர், பொதுச்செயளாலர் என பல்வேறு பரிமாணங்களை உடையவர்.

கண்டியிலிருந்த கோபாலமேனன் குடும்பம் கும்பகோணம் வந்ததிலிருந்துதான் தொடங்கியது இந்த சகாப்தம். தமிழ்ச்சமூகத்திற்கான எதிர்காலம் அங்கே ஆனையடிப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபடி பாய்ஸ் கிளப்பில் நடித்துகொண்டும் இருந்தது.

இந்த துள்ளலான சிலம்பாட்டக்காரனுக்கு எந்தவேடம் பிடித்தாலும் ஸ்ரீபார்ட் (நாயகி) வேடம் மட்டும் பிடிக்காது. நாளானது- வயது வந்தது – மகரக்கட்டை உடைந்தது. குரல் அப்போதுதான் கொஞ்சம் கரகரத்தது. நாடககம்பெனி மாறினார்.

உள்ளே கிடந்த சமூகப்பொறுப்பு நேரம் வந்ததும் வெளிவந்தது. ராஜகுமாரி படத்தின் போது வசனகர்த்தா கருணாநிதியுடன் தொடர்பு ஏற்பட்டு அரசியலில் தீவிரமெடுக்கிறார்.

அதற்குத்தோதாக அரசியல் கருவுக்கு உரமிடும் விதத்தில் அசோக் குமார் படத்தில் நடித்த போது தன் அரசியல் ஆளுமையால் பலருக்கும் மானசீகத் தலைவனாகிறார். அப்போதே அவரது அரசியல் தடம் ஆரம்பமாகியிருந்தது. அவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்ட அரசியல்பிரமுகர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, அதே சமயம் அண்ணாவின் அன்புக்கும் பாத்தியமாகி முக்கியமான செயல்வீரர்களில் ஒருவராகியிருந்தார்.

அரும்பு என்ற நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய இருவரும் வரவேண்டும் என அழைத்தார் உரந்தை உலகப்பன். அங்குதான் எம்ஜிஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர் என்கிற பட்டம் கிடைத்தது. அதன்பிறகு உலகம் தலைவர் எம்ஜிஆர் என்பதோடு மட்டுமல்லாமல் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் என்றே கொண்டாடி கூப்பிட்டு மகிழ்ந்தன.

”எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்கிற மலைக்கள்ளன் படத்துப் பாடல்தான் எம்ஜிஆரின் அரசியல்-சினிமா இரண்டையும் இணைத்துப் பயணிக்கவைத்தது. தொடர்ந்து குலேபகாவலி உள்ளிட்ட தொடர் படங்கள் எம்ஜிஆருக்கான சினிமாவை அரசியலாக மாற்றின. நடிப்பில் கவனம் கொண்டு அரசியலை ஒன்றும் கோட்டை விட்டு விடவில்லை.

அதேசமயம் சித்தூர் , செங்கல்பட்டு , என அரசியல் மாநாடுகளிலும் அனல் பறக்கச் செயலாற்றினார் எம்ஜிஆர். இந்த இரட்டைகுதிரை சவாரி எல்லோருக்கும் சவாலாக இருந்தபோது இவருக்கு மட்டும் இது இரட்டைகுதிரை பூட்டப்பட்ட ரதமாக இருந்தது .

தொடர் சினிமா வெற்றிகளுக்குப் பிறகு தானே ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தானே இயக்கியும் நடித்தார். இதிலும் அரசியலிலிருந்து விலகினாரில்லை. தன் தயாரிப்புக் கம்பெனியின் இலச்சினையில் கட்சிக்கொடியை வைத்திருந்தார்.

அதேசமயம் அரசியல்- சினிமா இரண்டையும் சமமாக நடத்தும் இவரது மேலாண்மைத் திறன் இன்றைய அரசியல் உலகம் கற்றுக்கொள்ளவேண்டியது.

1957 புயல் பாதிப்புகளுக்காக நிவாரணம் திரட்டசொன்னபோது அதிக நிவாரணம் திரட்டிய எம்ஜிஆரை மேடையில் பாராட்டினார் அண்ணா. அப்போது சொன்னதுதான், இந்த நெல்லிக்கனி யார்மடியில் விழும் என்று நினைத்தேன். ஆனால் அது என் மடியில் விழுந்திருக்கிறது. நான் அதை என் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொண்டேன். இது என் இதயக்கனி.

இந்த மோதிரக்குட்டுக்குப் பின் அசுரவேகமெடுத்தார் தலைவர் எம்ஜிஆர். திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் வெற்றிகள் அவரை விரட்டி விரட்டித் தொற்றிகொண்டன.

சமூகம் குறித்த பார்வை வந்தபோது எதிலும் சமூகத்தின் பார்வை என்ன என்பதையும் யோசித்த தலைவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர் .

சமுதாயத்தின் பார்வையில் நாம் என்ன என்பதை தனிப்பட கவனமெடுத்துக் கட்டமைத்துக் கொண்டதெல்லாம் அரசியலையும் தாண்டி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம்.

முதலமைச்சராயிருந்த போது கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களில் மதிய உணவு சத்துணவாக மாற்றம் பெற்றது ஒரு மைல்கல்தான். இதனால் அதுவரை தொண்டர்கள் வணங்கும் தலைவனாயிருந்தவர் அதுமுதல் ஏழைகள் வணங்கும் தெய்வமாயினார் .

அன்றுமுதல் இன்று வரை எல்லோர் நெஞ்சிலும் ரத்த்தின் ரத்தமாக கலந்திருக்கும் இந்தத் தலைவன் இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்துகொண்டேயிருப்பான்.

Exit mobile version