என்னடா இது. கையில லட்ட குடுத்துட்டு அங்க ஜிலேபிய பிச்சு போட்டுருக்கீங்க என்று குழம்பும் விவேக்கின் இதே நிலைதான் இந்த சுருக்கெழுத்தைப் (மேலே இருக்கும் படம்) பார்க்கிறபோது உங்களுக்கும் நடக்கும்.
கீறல் கீறலாக இருக்கும் இந்த கோடுகளின் நெளிவுகளில் இருக்கும் நேர்த்திதான் இதில் மிகவும் முக்கியம். எழுத்தில் லேசாக சாய்வு மாறினாலும் வேறு எழுத்து வேறு வார்த்தை .
சரி இப்படி ஒரு மொழியை யார்தான் பயன்படுத்துகிறார்கள். இதற்கு காளகேயர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறதா?
இது ஆங்கில மொழியின் அவசரக்காரர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து முறை. வெகுவேகமாக பேசும் பேச்சை அதேபோல வெகுவேகமாக எழுத முடியுமா என்றால் முடியும் என்று பதில் சொல்பவர்கள் இந்த சுருக்கெழுத்துத் தெரிந்தவர்களே…
4 சனவரி 1813 ம் ஆண்டு பிறந்த சர் ஐசக் பிட்மன் என்பவர்தான் இந்த சுருக்கெழுத்து முறைமையைக் கண்டுபிடித்தார். முதன்முதலில் 1837ம் ஆண்டு இந்த எழுத்துரு முறைமையை அறிமுகப்படுத்தினார். இன்று வரையில் இந்த நடைமுறைதான் வழக்கில் உள்ளது. இவர் 22 சனவரி 1897 ம் ஆண்டு உயிர்நீத்தார்.
இந்த மனிதரின் பிறந்த தினம்தான் இன்று. சனவரி 4 ம் நாள் இங்கிலாந்து வில்ட்ஷைர் நகரில் பிறந்தார்.
கண்டுபிடிப்பு என்றால் இவர் ஏதும் அறிவியல் ஆராய்ச்சியாளரா ? அறிவியல் அறிஞரா ?
இல்லை. ஒரு ஆடைத் தொழிற்சாலையில் கிளர்க்காக பணியாற்றிக்கொண்டிருந்த இவர் , 1831 ம் ஆண்டு ஒரு தொடக்கப்பள்ளியில் பயிற்றுநராக பணியில் சேர்ந்தார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இங்கிலாந்து பாத் நகரில் தன் சொந்தப்பள்ளியைத் தொடர்ந்தார்.
அப்போது வழக்கிலிருந்த டெய்லர் சுருக்கெழுத்து முறைமையை மாற்றி ஒலிக்குறிப்பைப் பின்பற்றி ஒரு சுருக்கெழுத்து முறை கண்டுபிடிக்க ஆர்வம் கொண்டார்.
1837 ம் ஆண்டு , சாமுவேல் பாக்ஸ்டர் என்பவரின் ஆலோசனையின் பேரில் இவர் கண்டுபிடித்த ஒலிக்குறிப்பு சார் சுருக்கெழுத்து முறையை 1837ம் ஆண்டு சாமுவேல் அவர்கள் பதிப்பித்து மிகக் குறைந்த விலையில் எல்லோரையும் சென்றடையும்படி வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து ஒலிக்குறிப்பு கல்வியகம் (ஃபொனெடிக் இன்ஸ்டிடியூஷன் ) ஒன்றையும் , ஒரு பருவ இதழையும் நிறுவி அவரது கண்டுபிடிப்பை பிரபலப்படுத்தி ஊக்குவித்தார்.
மேலும் சுருக்கெழுத்து குறித்து இவர் எழுதிய போனோகிராஃபி () என்னும் நூலும் வெகுவான வரவேற்பைப் பெற்று பலபதிப்புகள் வெற்றிகரமாக விற்றுத்தீர்ந்தன.
முதன்முதலில் ஆங்கிலத்துக்காகத்தான் இந்த ஒலிக்குறிப்பு எழுத்துசுருக்க முறைமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகே இதே முறையைப் பின்பற்றி பல்வேறு மொழிகளிலும் சுருக்கெழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தவகையில் தமிழில் சுருக்கெழுத்து முறை கண்டுபிடித்தவர் ராவ் சாகிப் சீனிவாசராவ் ஆவார். ஆங்கில சுருக்கெழுத்து அதை கண்டுபிடித்தவர் பெயரில் வழங்கப்படுவதை போலவே தற்சமயத்தில் வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சுருக்கெழுத்து முறை சீனிவாசராவ் முறை தமிழ்ச் சுருக்கெழுத்து என்று வழங்கப்படுகிறது
வெகுவேகமான பேச்சையும் எளிதாகப் படம்பிடிக்கும் எழுத்தியல் முறையான இந்த சுருக்கெழுத்து முறையை நினைவில் கொள்ளவேண்டும். இதை வரவேற்ற மக்களும் இந்த கல்வியாளரை , இவரது கண்டுபிடிப்பை பெரிதும் விரும்பி ஆதரவளித்தனர் . இவரது நினைவுதினம் இன்று.