நாட்டு மாடுகள் வளர்ப்பை மீட்டெடுக்கும் எம்.பி.ஏ பட்டதாரி – சிறப்பு தொகுப்பு

விருதுநகர் பகுதியில் நாட்டு மாடுகள் வளர்ப்பிலும், அதன் கழிவுகளிலிருந்து மருத்துவப் பொருட்கள் தயாரிப்பதிலும் சாதனை படைத்து வருகிறார், எம்.பி.ஏ., பட்டதாரியான சங்கர் கணேஷ். அது குறித்த செய்தி தொகுப்பினை காணலாம்…

மறந்து போன பராம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்பதற்கு, நாட்டு மாடுகளின் பங்களிப்பும் முக்கியமானது. மண், மாடுகள் மீது உள்ள பாரம்பரிய பிணைப்பை விட முடியாத சிலர், இன்றைக்கும் நாட்டு மாடுகளை பராமரித்து வருகின்றனர். அதில், விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான சங்கர் கணேஷ் குடும்பமும் ஒன்று. நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் கோமியம், சாணம் போன்றவை மருத்துவ குணம் கொண்டவை. இவற்றைக் கொண்டு, இயற்கை உரம் தயாரிப்பதில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர் இந்த குடும்பத்தினர்.

நாட்டு மாடுகளின் சாணத்தில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள், விவசாயத்திற்கு மிகவும் ஏற்றவை. நாட்டு மாடுகளின் சாணம், கோமியம், பால், நெய், வெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் பஞ்சகவ்யம்தான் இன்றைய இயற்கை விவசாயத்தின் உயிர்நாடியாக உள்ளது. இதனை தயாரிப்பதில் இந்த பகுதியில் சிறந்தவராக பட்டதாரி சங்கர் விளங்கி வருகிறார். இவர்களிடம் சாணமும், கோமியமும் வாங்க, போட்டி போட்டுக் கொண்டு தினமும் ஆட்கள் வந்த வண்ணம் உள்ளனர். மாடு வளர்ப்பை, பால் உற்பத்திக்காக மட்டும் இல்லாமல், வேறு கோணத்திலும் பார்ப்பதாக கூறுகிறார் சங்கர் கணேஷ்.

நகர் பகுதியில் வசிப்பவர்கள், நாட்டு மாடுகள் வளர்ப்போருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், உள் நாட்டு பொருளாதாரத்தை உயர்த்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

பிறந்ததிலிருந்தே மாடுகளுடன் வளர்ந்த இவரது பெற்றோர், மாடுகளையும் தங்கள் குழந்தைகள்தான் என்கின்றனர். மாடுகளின் உடல் நலத்துக்கான வைத்தியத்தில் கைதேர்ந்தவராக இருக்கிறார், சங்கரின் தாயார்.

தாயார் வைத்தியத்தில் கைதேர்ந்திருப்பதை போலவே, இவரது தந்தை இயற்கை முறையில் பொருட்கள் தயாரிக்கும் சூத்திரங்களில் வல்லவராக இருப்பதும், சங்கருக்கு பெரும் பலமாக இருக்கிறது.

மாடு வளர்ப்பை பாரம்பரியம் என்றும், அது ஒரு சமூகத்தினரின் தொழில் என்று மட்டும் பார்க்கும் சமூகத்தில், இயற்கை மருத்துவத்தின் இன்னொரு பகுதியாகவும் இதை பார்ப்பதால், வணிக ரீதியில் வெற்றியை எட்டியுள்ளார் சங்கர் கணேஷ். இவரது வெற்றி, இயற்கை வேளாண் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

Exit mobile version