வரிசையாய் விலகும் மய்யத்து சொந்தங்கள்!

திரையில் தனது வார்த்தைக்கு கட்டுப்படும் இந்த செம்மறி ஆட்டை போல கட்சியிலும் தான் சொன்னபடி கேட்பவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது “டிவிட்டர் குழந்தை” கமலின் பிடிவாதங்களில் ஒன்று. மறுப்பு, கேள்வி, உரையாடல் என எதற்கும் மய்ய தேசத்தில் அனுமதியில்லை. அங்கு கட்டளை, சாசனம் அனைத்தும் ஆழ்வார்பேட்டை ஆண் ராஜமாதா தான்.

சிவாஜி மடியில் தவழந்தேன்; எம்.ஜி.ஆர் தோளில் அமர்ந்தேன் என கம்பி கட்டுகிற கதையெல்லாம் விட்டு இந்திய சினிமாவின் இண்டலக்சுவல் முகமாக தன்னை காட்டிக் கொண்ட கமல் எனும் காலி அண்டா, அரசியலிலும் அப்படி ஏதாவது Perform செய்து DON ஆகி விடலாம் என்ற கனவோடுதான் மக்கள் நீதி மையத்தை தொடங்கியது. ஆனால் இரண்டு நிமிட பேச்சுக்கு இருபது நிமிடம் கேப் விட்டு கைதட்டலுக்காக காத்திருக்கும் அவரின் தற்பெருமை குணமும் தன்னிச்சையான போக்கும் அரசியலில் கமலை அப்புவாக்கி இருக்கிறது.

பிக்பாஸில் CONTESTENT-களை டீல் செய்வதை போல கட்சி உறுப்பினர்களையும் டீல் செய்யலாம் என தப்பு கணக்கு போட்டதுதான் பரமக்குடி கால்குலேட்டரின் பரிதாபத்திற்கு காரணம். சப்பாணி போல அடிவாங்கி அவமான பட மகேந்திரனுக்கும், பொன்ராஜுக்கும் விதியா என்ன…? எனவே தான் புழுதி வாரி தூற்றி விட்டு புறப்பட்டு விட்டார்கள். இன்று போதி தர்மர் புகழ் பத்மப்ரியா, சந்தோஷ் பாபு ஆகியோரும் ஒரே ஒரு குருக்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் பொங்கி வெளியேறி இருக்கிறார்கள்.

க்ளிக்கி மொழியில் அறிக்கை விடுவது மட்டுமே அரசியல் கட்சியை வளர்த்து விடாது என்பதை தேர்தல் தோல்விக்கு பிறகாவது வண்டுமுருகன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அரசியல் குறித்த அடிப்படை புரிதல், ஜனநாயகம், சமூகநீதி, கொள்கை எதுவுமே இன்றி கார்ப்பரேட் நிறுவனம் இயங்கலாம். ஆனால் ஒரு கட்சி இயங்க முடியாது என்பது மூன்றாம் பிறையின் மூளையில் இன்று வரை உதித்ததாக தெரியவில்லை.

இரண்டு விரல்களை மட்டுமே மூலதனமாக கொண்டு இந்தியன் தாத்தாவை போல ஒரே நாளில் இங்கு ஹீரோவாகி விட முடியாது. எனவே உலக நாயகன் முதலில் தன் தலைக்கு பின்னால் சுற்றும் ஒளி வட்டத்தை இறக்கி வைத்து விட்டு அரசியல் கட்சியாக மக்கள் பணி செய்ய வேண்டும். ஏனெனில் அரசியல் கட்சியின் வேலை தேர்தலை சந்திப்பது மட்டுமல்ல. மக்களை சந்திப்பது தான்.

Exit mobile version