தைத் திங்கள் இரண்டாம் நாளான இன்று, தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தங்கள் உழவுக்கும் வாழ்வுக்கும் உதவிய கால்நடைகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் தை முதல் நாளான நேற்று, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. தைத் திங்கள் இரண்டாம் நாளான இன்று, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் திருநாள், தமிழகம் முழவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவர்களின் உற்ற தோழனாக விளங்கும் மாடுகளை அதிகாலையில் குளிப்பாட்டி, கூர் தீட்டி, வர்ணம் பூசப்பட்ட மாடுகளின் கொம்புகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. புது மணிகள் கோர்த்த, புதிய கயிறுகள் மாடுகளுக்குப் பூட்டப்பட்டன. அதன்பிறகு, பயிர்கள், காய்கறிகளால் சமைத்த பொங்கலை மாடுகளுக்குப் படைத்து வழிபட்டனர். பின்னர் உழவர்கள் கரும்பு, பழங்களைக் கொடுத்து மாடுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
மாட்டுப் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடுவதை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம், எருதுவிடும் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.