லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்த பழனிசாமியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டுமென மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும் சமீபத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மேலும் மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி அலுவலகத்தில் காசாளராக பணிபுரிந்த பழனிசாமியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், பழனிசாமி, காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பழனிசாமி இறப்பை, கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி அவரது மகன் ரோகின் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையினரும், மற்றும் இந்த மரணம் குறித்து விசாரிக்கும் அனைத்து அரசு தரப்புக்களும், தீவிர விசாரணை மேற்கொண்டு, மரணத்திற்கான மர்மத்தை வெளிக்கொண்டு வர கேட்டுக்கொண்டுள்ளார்.