மார்ட்டின் காசாளர் மர்ம மரணம்: கொலை வழக்காக பதிவு செய்ய உறவினர்கள் போராட்டம்

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்த பழனிச்சாமியின் மர்ம மரணத்தை, கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் காவல் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும் சமீபத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மேலும் மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி அலுவலகத்தில் காசாளாராக பணிபுரிந்த பழனிசாமியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், பழனிசாமி, காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பழனிசாமி இறப்பை, கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி அவரது மகன் ரோகின் வலியுறுத்தி வந்தார். இதனிடையே, பழனிசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் முயன்றனர். இதற்கு ரோகின் மற்றும் அவரது உறவினர்கள் ஆட்சேபம் தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் காசாளர் பழனிசாமி உயிரிழந்த விவகாரத்தில், வருமான வரித்துறையினர் 2 பேர் மீது காரமடை காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனிசாமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அவரது மகன் ரோகின் குமார், கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தையை உடல் ரீதியாகவும், மன ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாகவும் கூறினார்.

Exit mobile version