தமிழகத்தில் பொங்கல் பண்டிகையினை ஒட்டி கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை தினம் விடப்பட்டிருந்தது. இதனையொட்டி சென்னை, கோவை போன்ற வெளியூர்களில் இருந்து ஒவ்வொருவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு பிரயாணம் செய்தனர். சிலர் சொந்த ஊருக்கு திரும்பாமல் வேலை பார்க்கும் ஊரில் இருந்த வண்ணமே பொங்கலைக் கொண்டாடினர். குறிப்பாக, சென்னையில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில்
சுமார் 200 டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி சென்னை மெரினா, பட்டினம்பாக்கம், பெசன்ட்நகர் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட
கடற்கரைகளில் ஏராளமானோர் குவிந்தனர். மணல் பகுதியே தெரியாத அளவுக்கு குடும்பத்துடன் மக்கள் குவிந்தனர். கடற்கரைக்கு வந்திருந்தவர்கள்
குப்பைகளை ஆங்காங்கே வீசி சென்றுள்ளார்கள். இதன் விளைவாக கடற்கரை முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் மதுபாட்டில்கள் என குப்பைகள் சூழ்ந்த காணப்பட்டது.. இதனைத்தொடர்ந்து சென்னை மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் விடிய,
விடிய குப்பைகளை அகற்றினர். இதில் மெரினாவில் மட்டும் சுமார் 200 டன் அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரைகளில் சுமார் 35 டன் அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் குப்பைகளை சரியாக குப்பைத் தொட்டியில் போடாமல் நடைபாதைகளிலும், அதிகம் நடமாடும் பகுதிகளிலும் வீசி எறிகின்றனர். மனிதர்களான நாம் இதுபோன்ற அலட்சியப்போக்கில் ஈடுபடுவது சரியில்லை. நாம் ஒவ்வொருவரும் சுயக்கட்டுப்பாடு, சுய சுத்தம் போன்ற அடிப்படைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதே நமது தலையாயக் கடமையாகும். இனி வரும் காலங்களில் குப்பையில்லா தமிழகத்தினை வளர்த்தெடுப்போம்.