மரங்களை வெட்டுவோர் மத்தியில் காட்டையே உருவாக்கிய லோயா

ஒரு தனி மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு காட்டையே உருவாக்கி காட்டியிருக்கிகிறார் மணிப்பூரை சேர்ந்த லோயா.

புவி வெப்ப மயமாதலும் பருவநிலை மாற்றமும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரு தனி மனிதன் இதற்காக என்ன செய்ய முடியும் என்பதே பெரும்பான்மையான மக்களின் எதிப்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால் ஒரு தனி மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிருபித்து இருக்கிறார் மணிப்பூரை சேர்ந்த லோயா.

மேற்கு இம்பாலில் பகுதியை சேர்ந்தவர் மொய்ரங்தம் லோயா. சிறு வயதிலிருந்தே மணிப்பூரின் மலை உச்சிகளில் நின்று பசுமை நிறைந்த காடுகளையும் மரங்களையும் பார்ப்பதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். 2000 ஆம் ஆண்டில் வெளியூரில் தங்கி கல்லூரிப் படிப்பை முடித்து, லோயோ சொந்த ஊருக்குத் திரும்பிய போது காடுகள் அழிக்கப்பட்டு வெற்றிடமாகியிருந்தது. காடுகள் மீது பெரும் பற்றுக்கொண்டிருந்த லோயாவால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

2002-ல் தன் சொந்த முயற்சியால் காடுகளை உருவாக்க முடிவெடுத்தார். இதற்காக முதலில் அவர் தேர்ந்தெடுத்த இடம் புன்ஷிலாக் என்னும் மலைப்பகுதி. நெற்பயிர் சாகுபடிக்காக அந்த நிலத்தில் ஒரு மரத்தைக்கூட விட்டுவைக்காமல் முற்றிலும் தீயினால் அழித்திருந்தார்கள். அங்கே மீண்டும் பசுமை பூத்துக்குலுங்க வேண்டுமென லோயா முடிவெடுத்தார்.

தனது வேலையை உதறித் தள்ளிவிட்டு புன்ஷிலாக்கில் தனக்கென ஒரு வீட்டை அமைத்துக்கொண்டு அங்கேயே வசிக்க ஆரம்பித்தார். ஆறு வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து, தன் முழு உழைப்பையும் அந்த நிலத்துக்காகவே செலுத்தத் தொடங்கினார்.

தொடக்கத்தில் தன் நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியோடு ஓர் அமைப்பாகச் செயல்பட்டு மரங்களை நட்டுமுடித்து செயல்படுத்தினார். அவரின் நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது. இயற்கையும் கைகொடுக்க மிக வேகமாக வளர்ந்த அம்மரங்களைப் பார்த்து உற்சாகம் கொண்டார். அவர் மேலும் தொடர்ந்து மூங்கில், ஓக், பலா, தேக்கு போன்ற மரங்களை நட்டார்.

2003-ம் ஆண்டு தன் தோழர்களோடும் தன்னார்வலர்களோடும் இணைந்த லோயா மரங்களை பாதுகாப்பதற்காக நணபர்களுடன் இணைந்து ஒரு குழுவை உருவாக்கி, அதன் வழியாக புன்ஷிலாக்கை மீட்டுருவாக்கம் செய்தார். இப்போது 18 வருடங்கள் கழித்து புன்ஷிலாக் தற்போது 300 ஏக்கர் நிலப்பரப்பில் செடிகொடிகளுடனும், மூலிகைகளுடனும், காட்டு விலங்குகளுடனும் அடர்வனமாகக் காட்சியளிக்கிறது.

தனியொருவனால் என்ன செய்ய முடியும் ? என்று சொல்வோருக்கு சரியான பதில் கொடுத்து மணிபூரின் கதாநாயகனாக மறியிருக்கிறார் லோயா…

Exit mobile version