கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவர் சரமாரியாக வெட்டிக்கொலை

திண்டிவனத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை நண்பர்கள் தாக்கியதால் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் டாட்டா ஏஸ் டிரைவராக உள்ளார். இவரது நண்பர் திண்டிவனம் வசந்தபுரத்தைச் சேர்ந்த யுவராஜ். கடந்த சில தினங்களுக்கு முன்பு 2,000 ரூபாய் சிவாவிடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். அதனை சிவா திருப்பிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் யுவராஜ் பணம் தருவதாக மாரியம்மன் கோயில் அருகே சிவாவை அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு அவரது நண்பர்களான காவேரிப்பாக்கத்தை சேர்ந்த சரத் என்கின்ற வெங்கடேசன் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் ஆகியோர் அங்கு வந்த சிவாவை கத்தி மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலை குலைந்து மயங்கி கீழே விழுந்தவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதனை அடுத்து சிவாவின் உடல், உடல்கூறு ஆய்விற்காக பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.

இந்த கொலை சம்பந்தமாக சரத் என்கின்ற வெங்கடேசன், யுவராஜ், செல்வம் ஆகிய மூவரையும் திண்டிவனம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version