மரம் வளர்ப்பை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை ஒற்றைக்காலில் மிதிவண்டி பயணம்

காற்று மாசுபடுவதைத் தடுக்க மரம் வளர்ப்போம் என்பதை வலியுறுத்தி, சென்னை வரையிலான ஒற்றைக்கால் மிதிவண்டி பயணத்தை, கன்னியாகுமரியில் தொடங்கிய மாற்றுத்திறனாளி வேலூர் வந்தடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் விஜயசாமி என்பவரின் மகன் மணிகண்டன். சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில், ஒரு காலை இழந்த இவர், மிதிவண்டிப் பயணம் மூலம் ‘கின்னஸ்’ சாதனைக்கு முயற்சித்து வருகிறார். இந்த நிலையில், காற்று மாசைத் தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும்  என்பதை வலியுறுத்திக் கன்னியாகுமரியில் கடந்த 13ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினார்.

14வது பயண நாளாக நேற்று வேலூர் வந்த மணிகண்டன், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தனது பயணத்தை ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நிறைவு செய்ய உள்ளதாகக் கூறினார்.

Exit mobile version