கிருஷ்ணகிரி டாஸ்மாக் பணியாளரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேரில், ஒருவரைக் காவல்துறைனர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த, குருபரப்பள்ளி அருகே பேட்டப்பனூர் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்தவர் திருச்சியைச் சேர்ந்த ராஜா. இவருக்கு வயது 43. இவரைக் கடந்த, 14 ஆம் தேதி இரவு ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு டாஸ்மாக் கடையில் இருந்த மது பாட்டில்கள் மற்றும் மூன்று லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்துக் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். தீவிர விசாரணையில், கொலை செய்தவர்கள் டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கித் திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்த நல்லூரைச்
சேர்ந்த மூன்று பேர் எனத் தெரியவந்தது.
சுதந்திர தினத்தில் மதுக் கடை கிடையது என்பதால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல மூன்று பேர் கடைக்கு வந்துள்ளனர். அங்கே ஊழியராகப் பனியாற்றிய ராஜாவிடம் மது பாட்டில்களைக் கேட்டுள்ளனர். அவர் மதுவை எடுக்க உள்ளே சென்ற போது, கல்லாப் பெட்டியில் அதிகமாகப் பணம் இருந்ததைப் பார்த்த அவர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் ராஜாவைக் கொடூரமாகக் குத்திக் கொன்றனர். பிறகு பணத்தையும், மது பாட்டில்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ராஜாவைக் கத்தியால் குத்தும் போது, ஒருவனுக்குக் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தியுள்ளது. கொலை நடந்த இடத்தில் இரண்டு விதமான ரத்தம் கிடந்ததால், கொலையாளிக்குக் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. அதில், கொலையாளிகளில் ஒருவன் வேப்பனப்பள்ளி தனியார் மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை பெற்றது தெரிந்தது. அவனைக் காவல்துறைனர் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.