இந்தி திரைத்துறையின் பிரபல பின்னணி பாடகரான அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கி, 15-க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் பல லட்சம் மோசடி செய்த வாலிபரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னணி பாடகரான அர்மான் மாலிக்-ன் பெயரில் போலியாக முகநூல் பக்கம் மற்றும் டுவிட்டர் கணக்கு ஆகியவற்றை துவங்கியுள்ளார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த மகேந்திர வர்மன். அதன் மூலம், இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் நட்பை தொடர்ந்த மகேந்திர வர்மன், தன்னிடம் பழகிய பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களை, முகநூல் பக்கம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், மகேந்திர வர்மனால் பாதிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, மகேந்திர வர்மனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.