கோவையில் புத்துணர்ச்சி முகாமில் யானையை கட்டையால் தாக்கிய பாகன் மற்றும் உதவியாளர் கைது!

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்ச்சி முகாமில், ஆண்டாள் கோயில் யானையை கடுமையாக தாக்கிய பாகன் உள்ளிட்ட 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேக்கம்பட்டியில் 13-வது யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் யானை ஜெயமால்யாதாவை, பாகன் வினில் குமார் மற்றும் உதவியாளர் சிவபிரசாத் ஆகியோர் கடுமையாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனையடுத்து, வினில் குமார் மற்றும் சிவபிரசாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்த வனத்துறை அதிகாரிகள், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முகாமிற்கு வந்த கால்நடைத்துறை அதிகாரிகள், யானைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

Exit mobile version