மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கீழ் இயங்கும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என மருத்துவ கல்லூரி நிர்வாகம் கோரிக்கை வைத்து வந்தது. ஆனால், போதுமான ஆய்வகங்கள், நூலகங்கள், மருத்துவர்கள் மற்றும் இட வசதிகள் இல்லை என இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இக்கல்லூரியில், மருத்துவ படிப்புக்கான எண்ணிக்கையை உயர்த்தி இருப்பதாக, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சேர்க்கை 150 லிருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் வெளியிட்டார்.