தொடர் புகையிலை பழக்கம் உள்ளவர்களில் 85 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கின்றனர்.
நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக நவம்பரை கடைப்பிடிக்கிறது உலக சுகாதார நிறுவனம். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காற்றின் மாசு, புகைக்கும் பழக்கம் போன்றவற்றால் நுரையீரலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்கின்றனர் மருத்துவர்கள்.
புகையிலை பழக்கம் உள்ளவர்கள் 85 சதவிகிதம் பேர் நுரையீரல் புற்றுநோய்க்கு உள்ளாகும் நிலையில், அவர்களிடம் இருந்து வெளியேறும் புகையை சுவாசிப்பவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு அதே பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கிறார் மருத்துவ நிபுணர் ஸ்ரீனிவாசன்.
சளி இல்லாமல் தொடர் இருமல், மூச்சு வாங்குதல், உடல் எடை குறைதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக நுரையீரல் சிகிச்சை மருத்துவர்களை அணுகுவது அவசியம்.
புகைப்பழக்கத்தால் எவ்வளவு கொடுமையான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை ஒவ்வொரு திரைப்படத்திலும் இரண்டுமுறை திரையிட்டு காட்டுகிறது அரசு. சிகரெட் பெட்டிகளிலும் கூட அதன் பாதிப்பை பட்டவர்த்தனமாக காட்டும் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று, ஒவ்வொரு நிதியாண்டிலும் சிகரெட்டின் விலையை உச்சகட்ட அளவில் உயர்த்தியும் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்ற அதிர்ச்சி தகவலை மறுப்பதற்கில்லை.