ஜூலை 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஜூலை 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய, தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கீழ் 5 ஆயிரத்து 500 டேங்கர் லாரிகள் உள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற டேங்கர் ஒப்பந்தத்தின் போது, மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் நாமக்கல்லைச் சேர்ந்த 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிகிறது. 4 ஆயிரத்து 800 டேங்கர் லாரிகள் மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் லாரி உரிமையாளர்கள் மாதத் தவணை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் தற்போது இயங்கிவரும் 4 ஆயிரத்து 800 டேங்கர் லாரிகளையும் நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version