தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
தனியார் பள்ளி மழலையர் வகுப்புகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள், சீருடை வசதிகள் போன்றவை இந்த மழலையர் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதிலும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மழலையர் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் திறன், பேசுதல் மற்றும் எழுத்துப் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட தரமான ஆரம்பக் கல்வி செலவில்லாமல் அளிக்கப்படவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட போதும் மக்களவைத் தேர்தல் காரணமாக மாணவர் சேர்க்கை தாமதமானது. இந்நிலையில் இன்று வகுப்புகள் தொடங்கும் நிலையில், அதன் பின்னரும் எல்கேஜி, யுகேஜிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் சேரும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை பள்ளிக்கல்வித் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. சமூக நலத்துறை மூலம் பென்சில்கள், கிரையான்ஸ்கள் மற்றும் கற்பித்தலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி வழங்குவதற்காக நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை நியமித்து தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 6 மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.