சான் பிரான்சிஸ்கோ நகரில் "யாதும் ஊரே" திட்டம் துவக்கம்

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் அதற்கான வலைதளத்தை, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் 60 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி, அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் அதற்கான வலைதளத்தை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற முதலமைச்சர், “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் அதற்கான வலைதளத்தை துவக்கி வைத்தார்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீடு செய்ய ஏதுவாக “யாதும் ஊரே” வலைதளம் பெரும் உதவியாக இருக்கும்.

நிகழ்ச்சியில், தமிழ் அமைப்புகள், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை நிர்வாகிகள், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் அமைப்பினர், கலிஃபோர்னியா தமிழ் கழக நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என்றார். தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு இது வசந்த காலம் என்றும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version