கைத்தறி துறையில் சாதித்து வரும் கிருஷ்ணவேணி

செட்டிநாடு என்றால் நம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது செட்டிநாட்டு உணவு வகைகள்… செட்டிநாட்டு உணவுக்கு அடுத்தப்படியாக செட்டிநாட்டு காட்டன் கைத்தறி சேலைக்கு அதிக மவுசு உண்டு… இத்தகைய செட்டிநாட்டு காட்டன் கைத்தறி சேலை தயாரிப்பு மற்றும் விற்பனையில் சாதனை படைத்துவரும், கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…..

200, 300 ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வந்த தேவாங்கர் என்று கூறப்படும் ஒரு சமூகத்தினர், முதன்முறையாக செட்டிநாட்டு காட்டன் புடவைகளை கைத்தறி நெசவு மூலம் தயாரித்து வந்தனர். இந்த செட்டிநாட்டு காட்டன் புடவைகள் கூறைப்புடவைகள் என்றும் அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில், பெண்கள் பின் கொசுவம் வைத்து கலாச்சாரத்திற்கு ஏற்ப காட்டன் புடவைகளை உடுத்தினர். தொன்றுதொட்டு, கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த காட்டன் புடவைக்கு, நாகரீகம் வளர்ந்த தற்போதைய காலத்திலும் மவுசு குறையவில்லை…

அடர் வண்ணங்கள், பட்டை பட்டையான கோடுகள் மற்றும் அதிகளவு கட்டங்கள் நிறைந்து காணப்படுவதே இந்த செட்டிநாட்டு காட்டன் புடவைகளின் சிறப்பம்சம். முழுக்க முழுக்க கைத்தறியில் நெசவு செய்யப்படும் இந்த காட்டன் புடவைகளில், அரக்கு, சிவப்பு, பச்சை, அடர் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை வண்ண சாயங்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. காண்போரை கவர்ந்திழுக்கும் இந்த செட்டிநாட்டு காட்டன் புடவைகளில், பொடி கட்டம், சிறிய கட்டம், பெரிய கட்டம் என்ற அவற்றின் அளவுதான் மாறுபடுமே தவிர, எல்லா வண்ண புடவைகளிலும் கட்டங்கள் தவறாது இடம்பெறும் ….

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண், நெசவுக் கூடம் அமைத்து, செட்டிநாடு காட்டன் புடவைகளை தயாரித்து வருகிறார். 150 பெண் பணியாளர்களை கொண்டு, 70க்கு மேற்பட்ட கைத்தறிகளின் மூலம், செட்டிநாட்டு பாரம்பரிய புடவைகள் நெய்து விற்பனை செய்து வருகிறார்.

முழுக்க முழுக்க கைகளால் நெய்யப்படும் காட்டன் புடவைகள், தரம் உள்ளதாகவும், விலை குறைவாகவும் உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகளவில் மக்கள் புடவைகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், அதிகளவில் ஆடர்கள் வருவதாக கூறுகிறார் கிருஷ்ணவேணி….

ஜிஎஸ்டி வரியில் சலுகை அளித்ததால், கைத்தறித் தொழிலை மேலும் மேம்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று மத்திய அரசுக்கு கைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version