கிருஷ்ணகிரியில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை சேர்க்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஜூன் மாதத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சேர்க்கை குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபாகர், பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்துவரும் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படக்கூடாது மற்றும் அனைத்து வாகனங்களிலும் GPRSகருவி பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசிய அவர், பள்ளியின் வசதிக்கு ஏற்பத்தான் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்றும் இதனை மீறி மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் பள்ளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.