கோவையில், திமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில், பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கிய விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் பகிரங்கமாக காவல்துறைக்கு புகார் தரலாம் என அறிவித்துள்ளனர்.
வடவள்ளி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 28 ஆம் தேதி கோவை மாவட்ட காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் அன்னூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆனந்த் வீட்டில் சோதனை செய்தனர். அந்த வீட்டின் ரகசிய அறையில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை சோதனை செய்தபோது, பணக்கட்டின் மேலும் கீழும் மட்டும் கரன்சி இருந்ததும், உள்ளே வெறும் காகிதங்கள் அடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
பணக்கட்டின் விளிம்புகளில் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டு கரன்சி நோட்டுகள் போன்று தெரியும்படி கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கிருந்த பணம் என்னும் இயந்திரங்கள், கரன்சி கட்டுகளை பின் அடிக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டது. இதுபோல போலியான பணகட்டுகளை தயாரித்து, கோடிக்கணக்கில் மோசடி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவருக்கு உடந்தையாக ஷேக், ரஷீத் ஆகியோர் இருந்ததும் தெரியவந்துள்ளது.
பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் எனவும், குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தருகிறோம் என சொல்லியும் ஏராளமானோரை ஏமாற்றியிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். கிட்டத்தட்ட சதுரங்கவேட்டை பட பாணியில் பகீர் மோசடிகளில் ஈடுபட்டு வந்த திமுக பிரமுகரின் செயல்பாடுகள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தி.மு.க பிரமுகர் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகளான ஷேக், ரஷீத் உள்ளிட்டோருக்கு வலை விரித்துள்ளனர். இந்த மோசடி கும்பலிடம் ஏமார்ந்தவர்கள், தங்களிடம் புகார் தரலாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவிநாசியில் திமுக சார்பில் களமிறங்கிய ஆனந்த், முன்னாள் திமுக எம்எல்ஏ இளங்கோவின் மகன் ஆவார். ஆனந்துக்கு சொந்தமான ஓனாப்பாளையம் பங்களா கிளப் உள்ளிட்ட பிற இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.