தமிழகம் காத்து கடமையாற்றிய ’சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி!

காலத்தின் கைகளில் வரலாறு எழுதப்படும்போது, மக்களின் மனங்களையும், உரிமைகளையும் மீட்பவர்களின் பெயர்கள் சிறிது ஆழப்படுத்தியே பொறிக்கப்படும். அவ்வகையில், தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும் பெயர் ம.பொ.சி.

சென்னை சால்வன்குப்பத்தில் ஏழைக் குடும்பத்தில் 1906-ம் ஆண்டு பிறந்த மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம், பின்னாளில் பார் போற்றும் ம.பொ.சி ஆனார். 3 ஆம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்டவர் தான் பின்னாளில் சிலம்புச் செல்வர் ஆனார்.

விடுதலைப் போராட்ட காலத்தில் சிறைவாசங்களில் ம.பொ.சி-க்கு சிலப்பதிகாரம் மூலம் தமிழ் இலக்கியத்திற்கான கதவுகள் திறந்தது. 1945 ஆம் ஆண்டு தமிழ்முரசு எனும் மாத இதழைத் தொடங்கி, அதில் தன் கருத்தாக்கங்களைப் பதிவு செய்தார். அவரின் “தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க” என்ற முழக்கம், பாமரனிடத்திலும் தனித்தமிழகத்திற்கான எழுச்சி விதையை துளிர்க்கச் செய்தது.

சுதந்திர இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தைக் காக்கக் கிளர்ந்தெழுந்தார் ம.பொ.சி. “உரிமைக்கு எல்லை வேங்கடம்; உறவுக்கு எல்லை இமயம்” என முழங்கி, தமிழ்தேச விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார். “மெட்ராஸ் மனதே” என போராடத் தொடங்கிய தெலுங்கர்களுக்கு, பதிலடி கொடுத்தவர் ம.பொ.சி. தந்தி அடிக்கும் போராட்டம் முதல் அனைத்து விதமான போராட்டங்களையும் மேற்கொண்டு “தலையை கொடுத்தேனும், தலைநகரைக் காப்போம்”, “தமிழருக்கேத் தலைநகரம்” என்று விண் அதிர முழக்கமிட்டார். அதன் விளைவாக நமக்கு கிடைத்ததேச் சென்னை மாநகர்.

தனித்தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ, அதே அளவு இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, சிலப்பதிகாரத் திறனாய்வு, விடுதலைப் போரில் தமிழகம், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டியத் தமிழன் போன்ற நூல்கள் அவரது இலக்கியப் புலமையை காலம் கடந்து எடுத்துரைக்கும். சிலப்பதிகாரம் மீது கொண்ட அளவற்ற காதலால் “சிலம்புச் செல்வர்” என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

’மாண்டு போனாலும், நல் மனிதனின் புகழ் ஒருநாளும் மறைந்து போகாது’ என்பதற்கேற்ப, தமிழகம் காத்து கடமை ஆற்றிய ம.பொ.சியை, சென்னையும், செந்தமிழும் ஒருபோதும் மறந்திடாது.

Exit mobile version