காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு, அருகில் இருந்த கோயில் ஒன்றில் அடைத்து 4 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் தொடர்புடைய 7 பேரை காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை இன்று மாலை நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, சஞ்சிராம், சர்வேஷ் குமார், தீபக் ஹஜூரியாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை பெற்ற இவர்கள் 25 வருடங்கள் சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சாட்சியங்களை அழிக்க நினைத்த 3 காவலர்களுக்கு தலா 5 வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் தலா 50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.