கரூர் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு 150 மாணவர்களை சேர்க்க அனுமதி

கரூர் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டே 150 மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2014 ஆம் ஆண்டு கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கரூர் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது . மேலும் காந்திகிராம பகுதியில் 27 ஏக்கரில் மருத்துவ கல்லூரி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு 769 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினர். இதனிடையே இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அனுமதிக்கலாமா என்பது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலின் குழுவினர் கரூரில் ஆய்வு செய்தனர். இதையடுத்துதான் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version