பண மோசடி புகாரில் கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் கைது

காஸ்மெட்டிக் வியாபாரியிடம், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி, 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கை, மத்திய குற்றப் பிரிவு காவல்துறைக்கு மாற்றி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாகீர் அகமத் தமான் என்பவர், சௌக்கார் பேட்டை காஸ்மெட்டிக் வியாபாரி தினேஷை நேரில் தொடர்பு கொண்டு, தனக்கு தெரிந்தவரிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் கோடிக் கணக்கில் இருப்பதாகவும், 500 மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளாக 80 லட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால், 20 சதவீத கமிஷனுடன், 1 கோடி ரூபாயாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை அள்ளி வீசியுள்ளார்.

இதனை நம்பிய தினேஷ், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள ஒரு பங்களா வீட்டில் 80 லட்சம் ரூபாய் பணத்தோடு வந்து இறங்கினார். அந்த பங்களா வீட்டில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி, ஜாகீர் அகமத் தமான், முனியாண்டி, விக்னேஷ், டேவிட் உள்ளிட்ட 5 பேர் இருந்துள்ளனர்.

தினேஷிடமிருந்து பணத்தை பெற்று, அதை எண்ணிப் பார்ப்பதாக கூறி முனியாண்டி, விக்கேஷ், டேவிட் ஆகியோர் வீட்டின் பின்புற கதவு வழியாக 80 லட்சம் பணத்தோடு தப்பியோடிவிட்டனர். நீண்ட நேரம் ஆகியும் மூவரும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த தினேஷ், நீலாங்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, நீலாங்கரை காவல்துறையினர் ஜோதிமணி மற்றும் ஜாகீரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி மற்றும் ஜாகீர் அகமத் தமானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே பலரிடம் இவர்கள் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 80 லட்சம் பணத்தோடு தப்பிச்சென்ற முனியாண்டி விக்னேஷ், டேவிட் உள்ளிட்ட 3 பேரும் எங்கு சென்றார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது…

இந்தநிலையில், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் குறிவைத்து இதுபோன்று ஏற்கனவே பலரிடம் மோசடி நடந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

ஜோதிமணி மீது, ஏற்கனவே போலி மருந்து தயாரித்த புகார் இருப்பதால், தற்போது அதைப் பற்றியும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version