கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன – 4 தொகுதிகளில் காங்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றி

கர்நாடக இடைத்தேர்தலில் 2 மக்களவை தொகுதிகளிலும், 2 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றது. கர்நாடகத்தில் பல்லாரி, ஷிவமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரா, ஜமகண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

ராமநகரா சட்டப்பேரவை தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளரும், முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதி ஏற்கெனவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் வசம் இருந்த தொகுதியாகும். ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தொகுதி ஏற்கெனவே காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியாகும். மாண்டியா மக்களவைத் தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் சிவராமகவுடா, 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி ஏற்கெனவே மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிடம் இருந்ததாகும்.

ஷிவமோகா மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 52 ஆயிரத்து 148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதி ஏற்கெனவே பாஜக வசம் இருந்ததாகும்.

இதேபோல ஏற்கெனவே பாஜக வசம் இருந்த பல்லாரி தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்கிரப்பா அத்தொகுதியில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்த வெற்றியை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி, வரும் நாடாளுமன்றத்தில் அனைத்து தொகுதிகளிலும் இந்த வெற்றியைப் பதிவு செய்யும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version