மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியது அக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்முக தேர்வின் போது மக்கள் நீதி மையத்திற்குள் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக கமலஹாசன் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக ஓரங்கட்டிக் கொண்டனர். கடலூர், நாகை மாவட்ட மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர் பதவியில் இருந்து குமரவேல் விலகினார். அதுமட்டுமின்றி கமலஹாசன் மீது காட்டமான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.
இதனால் அக்கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்ட நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட யாரும் விரும்பாத சூழல் நிலவியது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமலஹாசன், தான் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார். கட்சியினருக்கு சற்று ஆறுதலாக இருக்க, அவர் பிறந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
மக்கள் நீதி மய்யத்தை அதன் மையத்தில் இருந்து நன்கு அறிந்த வைத்திருந்த கமலஹாசன், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் தனது பெயரை வெளியிடாமல் பின்வாங்கினார். இதனால் அக்கட்சியினரிடையே நம்பிக்கையின்மை நிலவியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கமலஹாசன், முகம் தெரியாதவர்களுக்காக பல்லாக்கு தூக்குகிறேன் என விளக்கம் அளித்தார்.
இது எந்த வகையில் நியாயம் என அக்கட்சியினரே எண்ணற்ற கேள்விகளை தொடுக்க ஏமாற்றத்தோடு மக்களவை தேர்தலை சந்திக்கிறது மக்கள் நீதி மய்யம்…