கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு – மாணவியின் செல்போன் சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு!

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதியில் மாணவி மர்மமான முறையில் பள்ளி வாளகத்தில் இறந்து கிடந்தார். இதனால் கள்ளக்குறிச்சியில் பெரும் கலவரமே ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் இந்த மரணம் தொடர்பான வழக்கு இன்று வரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கானது நீண்ட நாட்களாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததை அடுத்து தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டின் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இவ்வழக்கு சி.பி.சி.ஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து மிகவும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்துள்ளது. மேலும் மாணவியின் தாயாரான செல்வியிடம், மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை ஒப்படைக்கும்படி கேட்டுள்ளார்கள். இதனை மறுத்து வந்த செல்வியிடம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் நான்கு முறைக்கு மேலாக சம்மன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த சம்மனை தட்டிக் கழித்து வந்த மாணவியின் தாயார் செல்வி தற்போது நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் ஆகியுள்ளார். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போனை நீதிபதிகளின் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைத்துள்ளார். இனி இதுபோன்ற அலட்சியப் போக்கில் மாணவியின் பெற்றோர்கள் ஈடுபடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version