"கடைசி விவசாயி" – காணக் கிடைக்காத அற்புதம்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் மூலம் கவனம் ஈர்த்த M. மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கடைசி விவசாயி.’ கிராமத்து வாழ்வியலையும் அதன் பின்னணியில் உள்ள விவசாயம், குலதெய்வ வழிபாடு, கிராம மக்களின் யதார்த்தம், அவர்களின் அறியாமை, பகடி போன்ற பல உள்ளடுக்குகளை காட்சிகளின் கோர்வையாக கொண்டுவந்துள்ளது இத்திரைப்படம்.

‘கடைசி விவசாயி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், எங்கே படம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்து பிரசாரத்தன்மையாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுவது இயல்பு.

ஆனால், அவைகளுக்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் சுக்குநூறாக நொறுக்கி விடுகிறது படத்தின் திரைக்கதை. அதேநேரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அதில் காணப்படும் தற்கால பிரச்சினைகளையும் எவ்வித சமரசமும் இல்லாமல் எடுத்துக்காட்டுகிறது.

மழை இல்லாமல் கடுமையான வறட்சியை சந்திக்கிறது உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமம். இதனால் பல வருடங்களாக தடைபட்டு வரும் குலதெய்வ வழிபாட்டுக்கு மொத்த கிராம மக்களும் தயாராகின்றனர்.

அதற்கு விவசாயி நல்லாண்டியின் பங்களிப்பு அவசியமாகும் நேரத்தில், அவருக்கு சிறு பிரச்சினையும் ஏற்படுகிறது. இறுதியில் குலதெய்வ வழிபாடு நடந்ததா? என உயிர்ப்புடன் விவரிக்கிறது ‘கடைசி விவசாயி.’

மாயாண்டி என்ற விவசாயி பாத்திரத்தில் நல்லாண்டி என்ற முதியவர். தீவிர முருக பக்தராகவும் மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் வரும் ராமைய்யா பாத்திரத்தில் விஜய் சேதுபதி, யானை உரிமையாளராக யோகிபாபு, நீதிபதியாக ரேய்ச்சல் ரெபெக்கா இவர்களுடன் இன்னும் சில சொற்பமான பாத்திரங்கள் மட்டுமே வருகின்றன.

இவர்களில் விஜய் சேதுபதியும் யோகிபாபுவும் கதையின் வெற்றிக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை, ஆனாலும் அவர்கள் சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கின்றனர்.வணிக ரீதியான வெற்றிக்காக மட்டுமே இவர்கள் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளனவா என்றும் கேள்வி எழுகிறது.

நல்லாண்டியாக வரும் முதியவர், பாத்திரமாக அல்லாமல் அப்படியே தனது இயல்பான வாழ்க்கையை திரையில் பதிவு செய்துள்ளார். வெள்ளந்தியான பேச்சும் விவசாயம் மீதான அவரது பற்றுதலும் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்துவிடுகிறது. முதியவரை முதன்மையான பாத்திரமாக தேர்வு செய்ததே, இப்படத்தின் முதல் வெற்றி.

அவரோடு பயணிக்கும் கருப்பன், சொட்டையன், மூக்கன், பூச்சிக்கண்ணு என்ற போலீஸ் பாத்திரம், பாட்டிகள் என, இவர்கள் அனைவரும் வெகு இயல்பாக திரைக்கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

குறிப்பாக கிராம மக்களுக்கு இடையே நடக்கும் பகடிகளுடன் கூடிய வசனங்கள், படத்திற்கு பெரும் பலமாக பொருந்தி நிற்கின்றன. வசனங்கள் முன்னமே எழுதப்பட்டதா அல்லது படப்பிடிப்பில் அவர்களாகவே பேசிக்கொண்டதா? என்று சந்தேகிக்க வைக்கிறது.

அதேபோல் நீதிமன்றத்தில் நடக்கும் காட்சிகளில் வழக்கமான செயற்கைத்தனங்கள் இல்லாமல் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீதிபதியாக வரும் ரேய்ச்சல் ரெபெக்கா பாத்திரமும் மிக யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் என படத்தை முழுமையாக தூக்கிச் சுமந்துள்ளார் மணிகண்டன். கிராமங்களில் பேசப்படும் தொன்மக் கதைகள், பறையிசையை மங்கள இசையாக கொண்டாடும் கிராம மக்கள், களிமண் தரை, மின்சாரம் இல்லாத வீடு, ஆடு, மாடு, கோழிகள், மதுரை வட்டார வழக்கு மொழி என பார்த்து ரசிக்க பல நுண் கதைகளையும் சீராக அடுக்கியுள்ளார் இயக்குநர் மணிகண்டன்.

விவசாயம் குறித்த கதையில் பச்சைப் பசேலென்ற காட்சிகளை பார்த்து ரசித்தவர்களுக்கு, இந்தப் படத்தில் வித்தியாசமாக பல பிரமிப்புகளை தனது கேமராவால் சுட்டுத் தள்ளி இருக்கிறார் மணிகண்டன்.

அவைகளை வார்த்தைகளால் விவரிப்பதை விட, திரையில் நேரடியாக பார்த்து ரசிப்பதே அறம். சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட்டு ஹார்வி ஆகியோரின் பின்னணி இசையும் படத்தின் ஆன்ம பலமாக ஒலிக்கிறது.

தமிழ் சினிமாவில் சர்வதேசத் தரத்திலான கலை படைப்புகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒன்றாக ‘கடைசி விவசாயி’ திரைப்படமும் நிச்சயம் இடம்பெறும்.

– அப்துல் ரஹ்மான்.

Exit mobile version