மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை எதிர்கொள்ளத் தயார் என பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி தெரிவித்துள்ளார்.
பத்திரிகைத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த எம்.ஜே.அக்பர், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளிவுறவுத்துறை இணையமைச்சராக இருந்து வருகிறார். இவர் பத்திரிகை துறையில் இருந்தபோது தனக்கு கீழ் பணிபுரிந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. பெண் பத்திரிகையாளரான பிரியா ரமணி மீ டூ ஹேஸ்டேக் மூலம் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். இதனிடையே பிரியா ரமணிக்கு எதிராக அவதூறு வழக்கை அவர் தொடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி, பல பெண்களின் குற்றச்சாட்டுகளை அரசியல் சதி என காரணம் காட்டி மத்திய அமைச்சர் புறந்தள்ளியிருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். தன் மீது அவதூறு வழக்கு தொடுத்ததன் மூலம், தனது நிலைப்பாட்டை அக்பர் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும், பல பெண்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவர்களை மிரட்டல்கள் மற்றும் தொந்தரவுகள் மூலம் அமைதிப்படுத்த முயற்சிக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தன் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும், தன்னை தற்காத்துக்கொள்ள முழுமையான உண்மை துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பிரியா ரமணி தனது குற்றச்சாட்டை நிரூபிக்க தவறும் பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.