2 சர்வதேச விருதுகள், குடியரசுத்தலைவர் விருது பெற்றவர் ஜே.கே. திரிபாதி: சிறப்பு தொகுப்பு

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இயக்குநராக இருந்த ஜே.கே. திரிபாதி ஐ.பி.எஸ். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் காவல் துறையிலும் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழும் திரிபாதி ஐ.பி.எஸ் குறித்த தொகுப்பை தற்போது காணலாம்.

தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.திரிபாதி, ஒடிசா மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ள திரிபாதிக்கு அனுஜா என்கிற மனைவியும், ஜட்வன் என்ற மகனும், ஜகிஷா என்ற மகளும் உள்ளனர்.

ஐ.பி.எஸ்.சில் தேர்ச்சி பெற்றதும் ஜே.கே.திரிபாதி, தமிழகத்தில் 1985-ம் ஆண்டு காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 9 மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், காவல்துறை துணைத் தலைவராகவும், திருச்சி காவல்துறை ஆணையராகவும் தன்னுடைய ஒவ்வொரு பணிகளிலும் ஜே.கே. திரிபாதி சிறப்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை தெற்கு மண்டல ஐஜியாகவும், ஆயுதப்படை ஐஜியாகவும், அமலாக்கப்பிரிவு மற்றும் மதிப்பீட்டுத்துறையுடைய ஏடிஜிபியாக படிப்படியாக உயர்ந்த ஜே.கே.திரிபாதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் 2 முறை சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவியை செவ்வனே செய்தவர். அதுவும் தேர்தல் காலத்தில் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மையில் சட்டம்-ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனராகவும், அதனைத் தொடர்ந்து சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் டிஜிபியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையில் திரிபாதி செய்த பணிகள் சிறப்பு வாய்ந்தவை. சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருக்கும்போது, திரிபாதி 16 ரவுடிகளின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆணையரான பிறகு, வேளச்சேரியைச் சேர்ந்த 5 கொள்ளையர்களின் அதிரடிகளை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் கொள்ளை அடித்த முருகேசன், செக்ஸ் டாக்டர் பிரகாஷ், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஆகியோர் இவர் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவரது பணிக்காலத்தில் காவல்நிலையங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஜே.கே.திரிபாதிக்கு, 2001-ம் ஆண்டு பொது மக்களுடன் காவல்துறை ஒருங்கிணைந்து செயலாற்றியதற்காக 2 சர்வதேச விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது, அதே ஆண்டில் பொது மக்களுடன் சிறந்த சேவை ஆற்றியமைக்காக ஸ்காட்லாந்தில் தங்கப் பதக்கம் ஆகியவை ஜே.கே.திரிபாதிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டன.

ஆதிசேஷையா சிறப்பு விருது, மக்கள் மேலாண்மையில் சிறந்த காவல்துறை அதிகாரி என முதல் பாரத பிரதமர் விருது ஆகியவை இவரது பணிக்கு மேலும் சில கிரீடக் கற்களாக அணிவகுத்தன என்றால் அது மிகையல்ல….

Exit mobile version