பவுலிங் ஆக்‌ஷனில் ரன்அவுட் செய்த பிக்பேஷ் வீரர்

ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக் தொடரில், வீரர் ஒருவர் விநோதமாக பவுலிங் ஆக்‌ஷனில் ரன்அவுட் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான பிக்பேஷ் லீக் போட்டிகள் கடந்த 19ந் தேதி தொடங்கியது. இதில், 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பந்துவீச தீர்மானித்தது.

18 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட இந்த போட்டியில், முதலில் விளையாடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 198 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 199 ரன்களை நோக்கி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஆடியது. அந்த அணியில் தொடக்க வீரர்கள் மட்டுமே சிறப்பாக ஆடிய நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 18 ஓவர் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடர்க்க வீரராக களமிறங்கிய ஜாக் வெதரால்டு 47 பந்தில் 83 ரன்கள் (10 பவுண்டரி, 3 சிக்ஸர்) குவித்தார். சதத்தை நோக்கி அதிரடியாக ஆடிய வெதரால்டு, பவுலிங் ஆக்‌ஷனில் ரன்அவுட் செய்யப்பட்டுள்ளார். ஸ்கொயர் லெக் திசையில் இருந்து ஜெய் ரிச்சர்ட்ஸன் தூக்கி எறிந்த அந்த பந்து, ஸ்டெம்பு அருகே நின்றிருந்த விக்கெட் கீப்பரின் கையில் தஞ்சம் அடைந்தது. அந்தளவிற்கு துல்லியமாக பவுலிங் ஆக்‌ஷனில் த்ரோ செய்யப்பட்ட அந்த பந்து, தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version