ஜெயம் ரவியின் 25வது திரைப்படமான ‘பூமி’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.
ரோமியோ ஜுலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பூமி’. லக்ஷ்மண் இயக்கிய முந்தைய இரு படங்களிலும் ஜெயம் ரவியே நடித்திருந்த நிலையில், அவரது மூன்றாவது படத்திலும் ஜெயம்ரவி இணைந்திருக்கிறார். ‘பூமி’ ஜெயம் ரவிக்கு 25வது திரைப்படமாகும். தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் நடித்துவந்த நிதி அகர்வால் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் வெளியாகி, ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஜெயம் ரவி தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கிறது என்பதால் சமீபத்தைய ஜெயம் ரவி திரைப்படங்கள் மீது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. பூலோகம், தனி ஒருவன், அடங்க மறு, டிக் டிக் டிக் ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான பேராண்மை திரைப்படம் கம்யூனிச தத்துவத்தை பேசியது. இத்திரைப்படத்தின் வசனங்கள் இப்போதுவரை சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், மீண்டும் விவசாயம் சார்ந்த கதைக்களத்திற்கு திரும்பியிருக்கிறார் ஜெயம் ரவி. சம்திங் சம்திங் திரைப்படத்தில் பகுதிநேர விவசாயம் செய்த ஜெயம் ரவி இத்திரைப்படத்தில் முழு நேரமாக விவசாயம் செய்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படம் விவசாயிகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய கருத்துகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் இதரபணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கான டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ‘பூமி’ படத்தின் டீசரை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். லக்ஷ்மண் இயக்கும் மூன்றாவது திரைப்படத்திற்கு, மூன்றாவது முறையாக இசையமைக்கிறார் டி.இமான். ஜெயம் ரவியுடன் நடித்த நடிகைகள் அதன் பிறகு பெரிய அளவிற்கு பேசப்படுவார்கள். தனக்கும் தமிழில் இந்த சென்ட்டிமெண்ட் ஒர்க் ஆகும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நிதி அகர்வால்.
“வட்டிக்கு காசு வாங்கி விவசாயம் செஞ்சும் ஒருவேளை சோத்துக்கு வழி இல்லாம இருக்கோம்யா”, “அடிமையா இருக்கோம்னு தெரியுற வரைக்கும் தான் உன்ன மாதிரி ஆளுங்க இங்க இருக்க முடியும்; தெரிஞ்சுதுனு வச்சுக்க…” என்பது போன்ற வசனங்கள் டீசரில் இடம்பெற்றுள்ளன. விவசாயம் சார்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ‘பூமி’ திரைப்படத்தில் புதிதாக எதை பேசப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.