உடல் குறைபாடு என்பது மனிதனின் வெற்றி பயணத்திற்கு ஒரு தடை அல்ல. அதுவும் அவர்களுக்கு ஒரு அடையாளம் தான். அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறுவதைவிட தங்கள் மீதான பிறரின் சிந்தனையை மாற்றும் அதீத திறனாளிகள் என்றுதான் கூறவேண்டும்.அப்படிப்பட்ட ஒருவர் தான் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஜெர்லின் அனிக்கா. ஜெர்லின் அனிக்கா பிறவிலேயே பேசும், மற்றும் கேட்கும் திறனை இழந்தவர். சிறுவயதில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாட துவங்கிய இவர், காலபோக்கில் நன்கு விளையாட கற்றுக்கொண்டு திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
காதுகேளாதோருக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவின் தைபேயில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 27 நாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜெர்லின் அனிக்கா, ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் 2 வெள்ளி ஒரு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்துள்ளார் ஜெர்லின் அனிக்கா.
ஆசிய பசிபிக் இறகுப்பந்து போட்டியில் மூன்று பதக்கங்கள், துருக்கி ஒலிம்பிக் போட்டியில் ஐந்தாம் இடம் என சிறு வயதிலேயே சாதனைகளை படைத்துள்ளார்.
தினமும் காலையிலும் மாலையிலும் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இவருக்கு தனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் உறுதுணையாக இருப்பதாகவும், சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பரிசுகள் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷெர்லின் அனிகா கூறுகிறார்.
தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம், மீம்ஸ் திட்டத்தின் கீழ் சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும்விதமாக, 10 லட்சம் ரூபாயை ஜெர்லின் க்கு வழங்க முதல்வர் அறிவித்திருப்பது, ஜெர்லினின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதாக அவரின் தந்தை கூறியுள்ளார்.