மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் உள்பட 9 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது, மருத்துவமனையில் இருந்த வசதிகள் குறித்த விபரங்களை தருமாறு ஆறுமுகசாமி ஆணையம் கேட்டிருந்தது.அதன்பேரில், இதுதொடர்பான விபரங்களை மருத்துவமனை டீன் ஜெயந்தி, ஆறுமுகசாமி ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி தாக்கல் செய்தார். அப்போது அவரிடம் எக்மோ கருவி பொருத்துவது உள்ளிட்ட சிகிச்சை முறைகள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கேட்டறிந்தார்.
ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி பொருத்தியது தொடர்பான சிகிச்சை முறைகளில், அப்போலோமருத்துவமனை மருத்துவர்களும், ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ஆணையம் கருதியது. இதையடுத்து, தோல்நோய் சிறப்பு மருத்துவர்கள், நரம்பியல் சிறப்பு நிபுணர், இதய அறுவை சிகிச்சை நிபுணர் உள்பட 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் குடும்ப மருத்தவர் சிவக்குமார், வரும் 3 ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், 9 மருத்துவர்களும் அடுத்தடுத்த தேதிகளில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.