நடிகர் சண்முகராஜன் மீது அளித்த பாலியல் புகாரை நடிகை ராணி திரும்பப் பெற்றுள்ளார். நந்தினி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் ராணி. நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்து பிரபலமானவர். இவர் தற்போது சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சென்னை கொரட்டூரில் நடைபெற்று வருகிறது.
இந்த சீரியலில் அவருக்கு கணவராக நடிப்பவர் நடிகர் சண்முகராஜன். இவர் விருமாண்டி, எம்டன் மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இந்நிலையில் எம் 4 செங்குன்றம் காவல்நிலையத்தில் நடிகர் ராணி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றம்சாட்டினார். நடிக்கும் போது, தன்னை கண்ட இடங்களில் தொடுவதாகவும், அடிக்கும் காட்சிகள் வந்தால் உண்மையாக பலமாக அடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சண்முகராஜனுக்கு கொரட்டூரில் வீடு இருக்கும் போது, அங்கு தங்காமல், தான் தங்கிருக்கும் அறைக்கு பக்கத்தில் இன்னொரு அறை எடுத்து, தங்கியுள்ளதாகவும், தன்னை அறைக்கு தனியாக வருமாறு அழைப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி கேட்ட தனது கணவரையும் சண்முகராஜன் தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில் காவல்நிலையம் வந்த நடிகர் சண்முகராஜன் தன்மீதான குற்றச்சாட்டு குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கினார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சண்முகராஜன் நடிகை, ராணிக்கும் தனக்கும் இடையே கைகலப்பு நடைபெற்றது உண்மை தான் என்றார். ஆனால் தற்போது இருவருக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டதால், அவர் தன்மீதான புகாரை ராணி திரும்பப் பெற்றதாக தெரிவித்தார்.