புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஆண்டு தோறும் ஜூன் 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. காட்டின் அரசன் சிங்கம் என அறியப்படும் நிலையில், அவற்றை விட வேட்டையாடுவதில் புலிகளே சிறந்தவை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு வகைகளில் புலிகள் சிறப்பம்சம் கொண்டவையாக உள்ளன. கூட்டமாக இருப்பதை தவிர்க்கும் புலிகள் பெரும்பாலும், தனிமையிலேயே வலம் வரும்.
சிங்கங்களை போல அல்லாமல் இறுதிவரை போராடும் திறன் கொண்ட புலிகள் வேட்டையாடிய உணவை முதலில் தனது குட்டிகளுக்கு கொடுத்த பிறகே தான் உண்ணும். பொதுவாக மனிதர்களை இரையாக பார்க்காத புலி தான் துன்புறுத்தப்படும் போது மட்டுமே தாக்குகிறது.
மற்ற வேட்டை விலங்குகளை காட்டிலும் புலிகள் அதிக நினைவு திறன் கொண்டவையாக உள்ளதுடன் இரையின் சத்தம் மற்றும் நடமாட்டத்தை எளிதில் உறுதி செய்யும் திறன் கொண்டது.
இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி 1972 ஆம் ஆண்டு முதன் முதலாக நடைபெற்றது. எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட குறைந்த அளவே புலிகள் உள்ளது தெரிய வந்ததால், 1973 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அரசு உருவாக்கியது. இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி எடுத்தது. சர்வதேச சந்தையில் புலிகளின் பாகங்களுக்கு பெரும் மதிப்பு இருப்பதால் அவற்றை பலர் வேட்டையாடுகின்றனர். இதனால், புலிகளை காக்கும் பொருட்டு வன சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. இதன் பிறகே புலிகளின் எண்ணிகை சற்று அதிகரிக்க தொடங்கியது. உலகில் உள்ள மொத்த புலிகளில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன. 2014 ஆம் ஆண்டின் கணக்குப்படி உலகில் உள்ள 3, 890 புலிகளில் 2, 226 புலிகள் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் 2, 967 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. காட்டுயிர்களின் உணவு சங்கிலியில் பெரும் பங்கு வகிக்கும் புலிகள் வனங்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகின்றன. இதனால் புலிகளை பாதுகாக்க அரசு மட்டுமல்லாது பொதுமக்களும் முன் வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் முன் வைக்கும் கருத்தாக உள்ளது.