கேரள மாநிலம், வயநாட்டில் நிஃபா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து பன்றிக்காய்ச்சலும் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக எல்லையில் அமைந்துள்ள வயநாட்டில் நிஃபா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு வந்த வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழகப் பகுதிகளில் மீண்டும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கீழ்நாடுகாணி, தாளூர், சேரம்பாடி சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.