இந்தியாவின் மிகப்பெரிய எலும்பு வங்கி அடையாறில் இயங்குகிறது

இந்தியாவின் மூன்றாவது எலும்பு வங்கியும், இதுவரையில் இந்தியா கண்ட எலும்பு வங்கிகளில் எல்லாம் மிகப் பெரியதுமான எலும்பு வங்கி சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.

மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவும் ரத்தவங்கிகள், கண் வங்கிகளைப் போன்றவைதான் எலும்பு வங்கிகளும். விபத்தினால் எலும்பு முறிவுகளை சந்தித்தவர்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் எலும்புகளில் பாதிப்புகளை சந்தித்தவர்களுக்கு வாழ்க்கையை மீட்டுத்தருபவையாக எலும்பு வங்கிகள் உள்ளன. சாலையில் பெரிய விபத்துகளை சந்திக்கும் 80% பேருக்கு எலும்பு வங்கிகளால் மறுவாழ்வை அளிக்க முடியும் என்பது இவற்றின் அவசியத்தை எளிமையாக விளக்கும்.

உயிருடன் உள்ள அல்லது இறந்த கொடையாளரிடமிருந்து பெறப்படும் எலும்பு பொதுவாக அடுத்த 7 முதல் 12 மணி நேரத்திற்குள் சிகிச்சையில் உள்ளவருக்குப் பொருத்தப்பட வேண்டும். ஒரு மனிதரிடம் இருந்து பெறப்பட்ட எலும்புகளால் 20 பேருக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்ற நிலையில் 20 பேருக்கும் ஒரே நேரத்தில் எலும்புகளைக் கொண்டு சேர்ப்பது சாத்தியமற்றது. இந்நிலையில் வங்கிகள் மூலம் உயர் குளிர்நிலையில் எலும்புகளைப் பாதுகாத்தால், அவற்றை அடுத்த 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். இதனாலேயே எலும்பு வங்கிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இரத்த தானம் தரும் போது இரத்தப் பிரிவு பொருந்த வேண்டியது அவசியம், எலும்பு தானத்தில் அதுகூட தேவையில்லை. எலும்பின் அளவு மட்டும் பொருந்தினால் போதும். சிறிய எலும்புகளை சிறு துண்டுகளாக்கியும் பயன்படுத்தலாம். இப்போது நடக்கும் பெரும்பாலான எலும்பு அறுவை சிகிச்சைகளில் ஸ்டீல் மற்றும் மரத்தால் ஆன செயற்கை உறுப்புகள்தான் பொருத்தப்படுகின்றன. இப்படிச் செய்யும் போது சிறிது காலத்தில் காலின் மற்ற எலும்புகள் வளர்ந்தால் செயற்கை உறுப்பை மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

வங்கிகள் மூலம் பெறப்பட்ட எலும்பை இந்த சிகிச்சைகளில் பயன்படுத்தும் போது மீண்டும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதோடு, மருத்துவச் செலவும் 20% முதல் 1,000% மடங்குவரை குறையும்.

சென்னை அடையாற்றில் பெறப்படும் எலும்புகள் மேம்படுத்தப்பட்டு கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணுஆய்வு மையத்தில் உள்ள உயர் குளிர் கிடங்குகளில் சேமிக்கப்பட உள்ளன. ஏற்கனவே மும்பை மற்றும் பெங்களூருவில் இரண்டு எலும்பு வங்கிகள் உள்ளன என்றாலும், சென்னையில் உள்ள எலும்பு வங்கியே அளவிலும் தரத்திலும் உயர்ந்ததாக உள்ளது. மூளைச்சாவை சந்திக்கும் நபர்களிடம் இருந்து எலும்புகளை முழுமையாகப் பெற்று பயன்படுத்தும் வசதிகள் இங்கு மட்டுமே உள்ளன. இந்த எலும்பு வங்கி ரோட்டரி சங்கத்தின் 80 லட்ச ரூபாய் நிதியுதவியோடு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

Exit mobile version