துணிந்து தாக்கிய இந்தியா… நிலைகுலைந்த பாகிஸ்தான்…

காஷ்மீரில் கடந்த 14ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் துணைநிலை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்தது. இந்திய மக்களிடைய இந்த தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தார். தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான அமைப்பிற்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். வீரமரணம் அடைந்த வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று கூறிய மோடி, தாக்குதலுக்கு பின்பலமாக செயல்பட்ட பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி உள்ள தீவிரவாத நிலைகள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் தரை மட்டமாக்கப்பட்டது. தாக்குதல் நடத்துவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய விமானப் படை இந்த வரலாற்று தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தியா நிறைய முறை எச்சரித்தும், புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து தெளிவான விளக்கத்தை தரவில்லை. அதுமட்டுமின்றி, இந்தியா ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும், பாகிஸ்தான் மீது வீண் பழி சொல்ல வேண்டாம் என்றும் மழுப்பி வந்தது. இதனால், இந்தியா இந்த வரலாற்று அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தியாவின் இந்த தாக்குதலை கண்டு பாகிஸ்தான் என்ன செய்வதன்று நிலைகுலைந்துள்ளது.மேலும் இந்திய விமானபடை தாக்குதல் நடத்தும் போது பாகிஸ்தான் விமானங்கள் பயந்து பின்வாங்கியதாக விமானபடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப் படையின் இந்த வரலாற்று தாக்குதலுக்கு அனைத்து தரப்பினரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தியா தற்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.

Exit mobile version