மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் 2 ரன்களுக்கும், ரோகித் சர்மா 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ரிசப் பண்ட் 20 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய விராட் கோலி ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தினால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி ஒருநாள் போட்டியில் 42-வது சதத்தை பதிவு செய்தார்.

125 ரன்களில் கோலி ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களிலும், ஜாதவ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் புவனேஷ்வர் குமார் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய ஹெட்மேயர் 18 ரன்களுக்கு அவுட் ஆக எவின் லீவிஸ் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் 42, ரோஸ்டன் சேஸ் 18, பிராத்வெய்ட், கெமார் ரோச், தாமஸ் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை ஆடிய கேப்டன் ஹோல்டர் 13 ரன்களுக்கு அவுட் ஆக அந்த அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு 0 என்ற நிலையில், இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

Exit mobile version