சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாவது இருபது ஓவர் போட்டி- டிக்கெட்டுகள் குறைந்தபட்சம் ரூ.1200 ஆகவும் அதிகபட்சம் 8 ஆயிரமாகவும் நிர்ணயம்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது இருபது ஓவர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று இருபது ஓவர் போட்டி தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. மூன்றாவது இருபது போட்டி வரும் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11.30க்கு தொடங்கியது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் ஆயிரத்து 200 -ஆகவும் அதிகபட்சம் 8 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்திலும் பேடிஎம் இணையதளத்திலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு அதிகபட்சம் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

 

Exit mobile version