மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா கோரிக்கை

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்து வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்காவின் ஆதரவை கோரியுள்ளார். வாஷிங்டன் சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் போம்பியோ உள்ளிட்டோரை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியூயார்க்கில் துவங்கியுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டு ஓட்டெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆட்சேபம் தெரிவிக்காத பட்சத்தில் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version