ஆசிய நாடுகளின் அபாய நிலை பற்றி ஐ.நா. பொதுச் செயலர் கவலை

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியநாடுகள் அபாயத்தில் உள்ளதாக ஐ.நா. சபையின் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் கூறி உள்ளார்.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் தென்கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் பங்குபெற்ற ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் பத்திரிகையாளர்களிடம், ஆசிய நாடுகளின் எதிர்காலம் குறித்த கவலை அளிக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இன்னும் 30 ஆண்டுகளில் உலகின் 30 கோடி மக்கள் கடல் நீர் மட்டம் உயர்வதால் பாதிக்கப்படுவார்கள் என சமீபத்திய ஆய்வுகள் கூறுவதாகவும், பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும் என்பது கணிக்கப்பட்டதுதான் என்றாலும், சமீப காலங்களில் முன்பு மதிப்பிடப்பட்டதை விடவும் மிக வேகமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகளின் அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பருவநிலை மாற்றத்தின் வேகம் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வேகத்தைவிடவும் அதிகமாக உள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

இந்த கடல் நீர்மட்ட உயர்வினால் பூமியின் வேறு எந்தப் பகுதியை விடவும் தென் கிழக்கு ஆசியாதான் அதிகம் பாதிக்கப்படும் என்றும், தாய்லாந்து, இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் பலர் தங்கள் வாழிடங்களை இழப்பார்கள் என்றும், குறிப்பாக தாய்லாந்தில் அந்நாட்டு மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் கடலால் பாதிப்படைவார்கள் என்றும் குட்டரெஸ் எச்சரித்தார்.

கடல் நீர் மட்ட உயர்வே தற்போது பூமி எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று அவர் கூறினார். உலக வெப்பமயமாதல் அதிகரிப்பதும், அதனால் இமயமலை உள்ளிட்ட பனி சூழ்ந்த இடங்களில் பனி வேகமாக உருகுவதும், இப்படியாக உருகும் நீரால் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகள் மூழ்கி வருவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஆண்டோனியோ குட்டரெசின் இந்தப் பேச்சு ஆசிய மக்களுக்கு இன்னொரு அபாய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Exit mobile version