பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் சுமார் 60-இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அண்ணாநகர், மணலி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அசோகா ரெசிடென்சி ஹோட்டல் உரிமையாளரின் அண்ணா நகர் வீடு மற்றும் போரூரில் அமைந்துள்ள அவரது ஹோட்டல் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆதித்யராம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ரேடியன்ஸ் ரியாலிட்டி கட்டுமான நிறுவன உரிமையாளரான வருண் மணியன் இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம், மணலி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு புகார் வந்ததை தொடர்ந்து வருமான வரி துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.