ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை கிண்டல் செய்யும் விதமாக, மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள புதிய விளம்பரம், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தங்களின் விளம்பரங்களில் மற்ற நிறுவனங்களை கேலி செய்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வரிசையில் இணைந்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பான சர்ஃபேஸ் லேப்டாப்புகளுக்கான விளம்பரம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.
அதில், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான மேக் புக் லேப்டாப்புகளை கேலி செய்யும் விதமாக, காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. விளம்பரத்தின் தொடக்கத்தில், மேக் புக் என்று ஒருவர் தனது பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவரது முழுப் பெயர் மெக்கன்சி புக் எனப் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. ஆப்பிளின் மேக் புக் லேப்டாப்பை விட மைக்ரோசாஃப்டின் சர்ஃபேஸ் லேப்டாப் பல்வேறு வகைகளில் சிறந்தது என மெக்கன்சி சொல்வது போல் அந்த விளம்பரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன லேப்டாப்புகள் திரையில் இருக்கையில், பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு, இவற்றில் சிறந்தது எது என்ற கேள்வி அவரிடம் கேட்கப்படவே, அந்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார். இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் அமைந்திருக்கும் இந்த விளம்பரம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.