ஏன் அமேசான் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் ?

அமேசான் காடுகளில் பற்றி  எரியும் தீ சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அமேசான் காடுகளால் உலகிற்குக் கிடைக்கும் நன்மைகள் எவை? அவை அழிக்கப்படும் போது உலகுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

புவியில் வளி மண்டலத்தில் உள்ள 20% ஆக்சிஜன் வாயு அமேசான் காடுகளால்தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் அது ‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகின்றது. 

உலகின் கார்பன் கிடங்கு – என்றும் அமேசான் காடுகள் அறியப்படுகின்றன. அமேசான் காடுகள் மட்டும் இல்லை என்றால் உலகில் பெருகும் கார்பனை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. உலகம் வெப்பமயமாதலால் அழிந்துவிடும்.

உலகின் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்கம் உள்ள காடாக அமேசான் உள்ளது. உலகில் இதுவரைக் கண்டறியப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைகளில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில்தான் வாழ்கின்றன.

அமேசான் காடுகளில் தட்பவெப்பநிலை தனித்துவம் வாய்ந்தது. இங்குள்ள 75% விலங்குகள் மற்றும் தாவரங்களை உலகின் வேறெந்தப் பகுதியிலும் நம்மால் காண முடியாது.

தாவரங்கள் மற்றும் விலங்குகளைத் தாண்டி மனிதர்களுக்கும் அமேசான் காடுகள் வாழ்க்கை அளிக்கின்றன. அமேசான் காடுகள் 3 கோடி மக்களுக்கு இருப்பிடமாக உள்ளது. இவர்களில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் அமேசானின் பூர்வகுடிகள் ஆவர்.

அமேசான் காடுகளில் தீவிபத்துகள் சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்து உள்ளன. பிரேசில் நாட்டின் விண்வெளி மையம் கொடுத்துள்ள தரவுகளின்படி, பிரேசிலிடம் உள்ள அமேசான் காடுகளில் இந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 75 ஆயிரம் தீ விபத்துகள் நடந்துள்ளன.

வெனிசுலா நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் 26 ஆயிரம் விபத்துகளும், பொலிவியா நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் 17 ஆயிரம் விபத்துகளும் பதிவாகி உள்ளன.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, அமேசானில் மிக அதிக தீ விபத்துகள் பதிவான ஆண்டாக 2019ஆம் ஆண்டே உள்ளது. இது உலகத்திற்கு நல்லது அல்ல.

அமேசான் காட்டின் தீ விபத்துகளால் இவ்வாண்டு மட்டும் 2.28 லட்சம் கோடி கிலோ அளவுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு காற்றில் கலந்து உள்ளது. 2010ஆம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்படும் கணக்கீடுகளின்படி இதுவே உச்சபட்ச அளவாக உள்ளது.

அமேசான் காடுகளில் தீ பற்றி எரிவதால், அங்கிருந்து 1,700 கிலோ மீட்டர்களுக்கு வானம் கருமையாகக் காணப்படுகின்றது. கருப்பு மேகங்கள் சூரிய ஒளியைக் கூடத் தடை செய்கின்றன.

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் 99% மனிதர்களால் தெரிந்தும், தெரியாமலும் ஏற்படுத்தப்படுபவை என்று தரவுகள் கூறுகின்றன.

ஏற்கனவே அமேசானில் சுரங்கம் தோண்டுவது, விவசாரம் செய்வது, பாதை அமைப்பது, மின்நிலையங்கள் கட்டுவது – போன்ற பணிகளால் 20% உயிரினங்கள் அழிந்துவிட்டன. இந்தக் காட்டுத்தீ மீதமுள்ள உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

இப்படியாக அமேசான் காடுகளை அழிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை மேய்ச்சல் நிலங்களுக்காகவே செய்கின்றனர். இது 80% காடழிப்புக்குக் காரணமாக உள்ளது.

அமேசான் காடுகளை மனிதர்கள் தீவைத்து அழிப்பதால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் காற்றில் சுமார் 34 கோடி கிலோ அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு கலக்கின்றது. உலகின் ஒட்டுமொத்த மாசுபாட்டில் இது 3.4% ஆக உள்ளது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், அமேசான் அழிக்கப்படும் போதெல்லாம், உலகமும் அழிவை நோக்கி செலுத்தப்படுகிறது. 

அமேசான் காடுகளைப் பற்றி அனைத்து மக்களும் அறிந்து கொள்வதும், மரங்கள் மற்றும் காகிதங்களின் தேவையைக் குறைத்துக் கொள்வதும், அமேசான் காடுகளைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து குரல் எழுப்புவதும் மட்டுமே அந்தக் காடுகளைக் காப்பாற்ற உதவும்.

 
Exit mobile version