"க்" திரைப்படம் சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களத்துடன் உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் கால்பந்தாட்ட வீரனின் உளவியல் பிரச்சினையை பின்னணியாகக் கொண்டு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘க்.’ அவ்வளவு எளிதாக யாராலும் யூகிக்க முடியாத, அதேநேரத்தில் கொஞ்சம் சிக்கலான கதையை தேர்வுசெய்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

முதல் காட்சியில் இருந்தே ஒருவித எதிர்பார்ப்புடன் படம் தொடங்குகிறது. கால்பந்தாட்ட வீரர் வசந்த் சந்திரசேகர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கிருக்கும் ஜன்னல் வழியாக அவர் ஒரு கொலையை பார்க்க நேரிடுகிறது.

முன்னதாக கால்பந்து பயிற்சியின் போது, அவரால் ஒரு புறாவும் உயிரிழக்கின்றது. வசந்த் சந்திரசேகர் பார்த்த கொலை கற்பனையானது, ஆனால் புறா உயிரிழந்தது உண்மையானது. இந்த இரண்டுக்கும் இடையிலான முடிச்சு தான் ‘க்’ படத்தின் ஜீவன்.

இந்த திரைக்கதையை ஞானப்பிராகசமாக வரும் குரு சோமசுந்தரம் பாத்திரம் மட்டுமே முழுமையாக சுமக்கின்றது. அவரது பாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

இறுதியாக உளவியல் மருத்துவரான ஒய்.ஜி. மகேந்திரன் பாத்திரம் மூலம் மொத்த மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் இடத்தில், ‘க்’ பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

முக்கோண விதி திரைக்கதை மூலம் வியப்பை ஏற்படுத்திய ‘ஜிவி’ படத்தின் கதையாசிரியர் பாபு தமிழ், ‘க்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஜிவி’ படத்தின் அனுபவத்தில் இருந்து, இந்தப் படத்திற்கு மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கலாம்.

படத்தின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் சோதிப்பது புரியாத புதிராக நகரும் திரைக்கதை தான். இரண்டாவதாக நாயகன் வசந்த் சந்திரசேகராக வரும் யோகேஷ், யதார்த்தமாக நடிக்க முயன்றிருக்கலாம்.

எல்லா காட்சிகளுக்கும் ஒரேமாதிரியான உணர்வுகளற்ற அவரது முகபாவனைகள் கதையின் போக்கை மேலும் சோதிக்கிறது. கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பங்களிப்பைத் தருகின்றன.

மனிதனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும், ஆழ்மனதின் அற்புதங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் நம்பமுடியாத பல விசித்திரங்களை நாம் உணர முடியும். இந்தப் படம் சொல்ல முயன்றதும் இதுதான். இதையே இன்னும் கொஞ்சம் சிறப்பாக சொல்லியிருந்தால், பலரின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்.

‘க்’ அரிதான படைப்பாக அடையாளம் காணப்பட வேண்டியது, ஆனால் வழி தவறிவிட்டது.

– அப்துல் ரஹ்மான்

Exit mobile version