திருச்சியில் ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

பாரிவேந்தர் பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகியும், பிரபல ரவுடியுமான பட்டறை சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் பொன்மலைப்பட்டியை சேர்ந்த பட்டறை சுரேஷ் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. மேலும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

இந்நிலையில் துவாக்குடி அருகே நடந்து சென்ற விஜய் என்பவரை பட்டறை சுரேசும், அவரது நண்பர் செந்தில் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஜய் அளித்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், பொன்மலைப்பட்டியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் படி இருவர் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version